திருக்கோயில் என்னும் பெயரில் 1958இல் தொடங்கப்பட்ட இவ்விதழ் திருக்கோயில் அமைப்புகள், திருக்கோயில் வழிபாடுகள், திருக்கோயில் பூஜை முறைகள், கோயிற்கலை, சிற்பத் திருமேனிகள், அதன் வழிபாடுகள், பண்டிகைகள், திருவிழாக்கள், இந்துக்களின் சடங்கு முறைகள் குறித்த கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது.
ஆன்மாக்கள் இந்து சமயக் கோட்பாடுகளுடன்; உலகத்தோற்றத்தின் முக்கியத்துவத்தை அறியும் வண்ணம் சைவ வைணவ சமயத்தின் குருமார்களும் ஆச்சார்யார்களும் காட்டிச் சென்ற சித்தாந்தம் மற்றும் வேதாந்த (அத்வைத விசிட்டாத்வைத துவைத) கொள்கைகளை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் நடைமுறை விளக்கங்களோடு கட்டுரைகளும் வெளியிடப்படுகின்றன.
பக்தி இலக்கியங்களான திருமுறைப் பாயிரங்களால் பாடல்பெற்ற திருக்கோயில்கள் நாலாயிரத்திவ்ய பிரபந்த பாசுரங்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலங்கள் என தனிச் சிறப்பாக உலகமக்கள் அறியும் வகையில் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன.
அண்மைக்கால அருளாளர்களான இராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், பாம்பன் சுவாமிகள், அருட்பிரகாச வள்ளலார் போன்ற அருளாளர்களின் கொள்கைகளும் அவர்களின் படைப்புகள் குறித்த கட்டுரைகளும் தொடர்ந்து இடம்பெறுகின்றன.
ஒவ்வொரு மாத நிகழ்வுகளாக திருக்கோயில்களில் நடைபெறும் சிறப்புநிகழ்வுகள், பக்திக் களஞ்சிய வினா-விடை என ஆன்மிகத் தகவல்களோடு எண்ணற்ற சமயச் சிந்தனைகளை முறையாக ஆற்றுப்படுத்தும் பணியை இவ்விதழ் செவ்வனே செய்து வருகிறது.
இதழ் சந்தா விபரம்
- தனி இதழின் விலை ரூ.20
- ஓராண்டுச் சந்தா ரூ. 240
- ஐந்தாண்டுச் சந்தா ரூ.1150
- பத்தாண்டுச்சந்தா ரூ.2300
- ஆயுட்காலச் சந்தா ரூ.3450 (ஆயுட்காலம் 15 ஆண்டுகள் மட்டும்).
இதற்கான பணவிடை அல்லது வரைவோலையை Commissioner, HR & CE Dept., Chennai-34 என்ற பெயரில் எடுத்து கீழ்க்கண்ட துறை முகவரிக்கு அனுப்பவும்.
கிடைக்குமிடம்
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய திருக்கோயில்களில் கிடைக்கும். அலுவலக முகவரியில் நேரடியாகக் கிடைக்கும். இவ்விதழ் தனியார் கடைகளில் கிடைக்காது. இணையம் வாயிலாகவும் சந்தாதாரர் ஆகலாம். https://tnhrce.gov.in உசாத்துணை அலுவல்முறை இணையத்தளம்.
இதழ்ஆசிரியர்கள்
திருக்கோயில் இதழின் அலுவல் வழி சிறப்பு ஆசிரியராகவும் வெளியீட்டாளராகவும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் இருக்க, ஆசிரியர்களாக 1958இல் இருந்து நா.ர.முருகவேள், அமிர்தலிங்கம் ஆகியோர் ஆசிரியர்களாக இருந்தனர். தற்பொழுது டாக்டர். எஸ். பிரபாகர், இ.ஆ.ப. - ஆணையர் வெளியீட்டாளராகவும், சிறப்பாசிரியராகவும் இருக்கிறார். இதழ்ஆசிரியராக முனைவர் ஜெ.சசிக்குமார் இருந்து வருகிறார்.
அலுவலகம்
முகவரி: ஆசிரியர், திருக்கோயில் திங்களிதழ், இந்துசமய அறநிலையத்துறை, 119, உத்தமர் காந்தி சாலை, நுங்கம்பாக்கம், சென்னை-600034 மின் அஞ்சல் thirukkoil@tnhrce.org https://tnhrce.gov.in தொலைப்பேசி: 044 28334813,14,15
வெளியீடுகள்
இணையத்தளத்தில் இந்து சமய அறநிலையத்துறை வெளியீடாக ஆன்மிக அன்பர்களின் தேவையைக் கருத்தில் கொண்டு சமய நூல்கள் வெளியிடப் படுகின்றன. 1. இந்து மத இணைப்பு விளக்கம், 2. சைவ வைணவம், 3. திருக்கோயில்களின் தகவல்கள் அடங்கிய மாவட்டக் கையேடுகள், 4. திருக்கோயில் தல வரலாறுகள் போன்ற நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
திருக்கோயில் இதழ் 1958இல் தொடங்கப்பட்ட இந்து சமயக் கோட்பாடுகள், திருக்கோயில் வரலாறுகள், மகான்கள் மற்றும் அடியார்களின் திருத்தொண்டுகள் மற்றும் வரலாறுகள், ஆன்மீகம் சார்ந்த வாழ்வியல் வழிகாட்டுதல்கள், அறக்கருத்துகள் ஆகியவை இதன் உள்ளடக்கங்கள். தமிழ் இலக்கிய, ஆன்மீக அறிஞர்கள் பலர் இதில் பங்கேற்று எழுதியுள்ளனர். கிருபானந்தவாரியார், ம.பொ.சிவஞானம், மு.அருணாச்சலம், கி.வா.ஜகந்நாதன், ந.சுப்புரெட்டியார், டி.என்.சிங்காரவேலு, அருணை வடிவேல் முதலியார், க.வச்சிரவேலர், கி.ஆ.பெ.விசுவநாதம், என்.சேதுராமன், க.த.திருநாவுக்கரசு, சுத்தானந்தபாரதியார், ச.வே.சுப்பிரமணியம், வ.சுப.மாணிக்கம், முனைவர் இரா.கலைக்கோவன், நாராயண வேணுகோபால நாயக்கர், மு.அருணகிரி, மற்றும் இந்திய ஆட்சிப் பணியில் உள்ள பலர் இதில் பங்களித்துள்ளனர்.
இணையம் வழிப் புத்தகம் பெறும் திட்டம்
இந்து சமய அறநிலையத் துறை திருக்கோயில் இதழ் பிரிவால் கிராமப்புற மாணவர்களுக்கு உதவும் நோக்கில் இணையம் வாயிலாக பணம் செலுத்தி வீட்டிற்கே புத்தகம் அனுப்பி வைக்கும் திட்டம் (Online Book Delivery) தொடங்கப்பட்டது. சமய அறிவை உள்ளவாறு புரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இந்து மத இணைப்பு விளக்கம், சைவ வைணவம், ஆலய பிம்ப லக்க்ஷணம், இராமானுஜர் போன்ற நூல்கள் வெளியிடப்பட்டன. வடசொற்களில் சமயகொள்கைகள் அதிகம் இருப்பதால் விளங்கிக் கொள்வதில் ஏற்படும் சிக்கலைத் தவிர்க்கும் பொருட்டு திருக்கோயில் திங்களிதழில் நடைமுறைத் தமிழில் கட்டுரைகளாக விளக்கப்படுகின்றன. மேலும் இளைய தலைமுறையினர் புராணங்களை எடுத்துச் செல்லும் நோக்கில் சிறுகதை போலவும் வினா விடைகளாகவும் இதழில் வெளியிட்டு வருகிறோம்.
மேலும், துறை சார்ந்த தேர்வுகளுக்கு படிக்கும் மாணவர்களுக்கும், பாடத் திட்டத்திலுள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள பாடத் திட்டத்தின்படி அமையப் பெற்றுள்ள
- இந்து மத இணைப்பு விளக்கம்
- சைவ வைணவம்
- திருக்கோயில் திங்களிதழ்
ஆகியவற்றை இணையத்தளத்தில் பணம் செலுத்திய பிறகு மேற்கண்ட புத்தகங்கள் தங்கள் முகவரிக்கு 10 நாட்கள் முதல் அதிகபட்சமாக 30 நாட்களுக்குள் அனுப்பி வைக்கப்படும். தாங்கள் செலுத்திய தொகையில் திருக்கோயில் இதழ் ஓராண்டுச் சந்தாத் தொகை ரூபாய் 240-ம் இதில் அடங்கும். மேற்கண்ட புத்தகங்களோடு திருக்கோயில் திங்களிதழ் ஒன்று மட்டும் அஞ்சலில் அனுப்பி வைக்கப்படும். மீதமுள்ள பதினொரு மாதங்களுக்கு தாங்கள் குறிப்பிட்ட முகவரிக்கு இதழ் அஞ்சலில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகங்களுக்கான இணையப் பதிவில் தொய்வு ஏற்படுகிறது எனில் ஸ்டாக் / செர்வர் போன்ற காரணங்களால் மட்டுமே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்.
இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புபவர்கள் முகவரியைத் தெளிவாகக் குறிப்பிட்டு இணையத்திலேயே பணம் செலுத்த வேண்டும்.